Thursday, December 8, 2011

நீ, நான், அவன்.!

டாஸ்மாக்கில் சைட் டிஷ் கொண்டுவர லேட்டானதால் கொட்டு வாங்கும் சட்டை பட்டனில்லா சிறுவன், கார் கண்ணாடியின் தூசிகளை தட்டிவிட்டு ஓம் படம் வரைந்து தலையை சொறியும் அழுக்கு சட்டைக்காரன், தூணிலும் துரும்பிலும் இருக்கும் கடவுளை முச்சந்திக்கு இழுத்து வரும் சாலை படம் வரைபவன், களைப்புக்கு தூங்கப்போறானோ , கொழுப்பு கரைக்க புணரப்போறானோ என்ற கேள்விகளை துறந்துவிட்டு தோள்கள் வலிக்க கட்டில் இழைக்கும் ஆசாரி, காற்று அமுங்கிப்போன சக்கரம் கொண்ட தள்ளுவண்டியை தள்ளிப்போகும் சோன்பப்டிக்காரன், சாமிகளை கண்ணாடி பிரேமிற்குள் அடைத்து விற்பவன், ரூ. 8 கடன்பாக்கியை மறக்காமல் தர வேண்டிக்கொள்ளும் கையேந்திபவன் ஓனர், ஐஸ் வேணுமா? வேணாமா? என அக்கறையுடன் கேட்டுக்கொண்டே ஈ ஓட்டும் கரும்பு ஜூஸ் கடைக்காரர், சூடா என்ன இருக்கு? என்ற கேள்வியை லட்சத்திநூறாவது தடவை கேட்டுவிட்டு டேபிள் துடைத்துக்கொண்டே கடகடவென ஒப்பிக்கும் இளைஞன், கோக்கையும் பெப்சியையும் சொன்ன விலைக்கு வாங்கிக்குடிப்பவர்களிடம் 2 ரூபாய்க்கு பேரம் பேசிக்கொண்டிருக்கும் இளநி விற்பவர், பழைய லாரி தில் 'இங்கு பஞ்சர் ஒட்டப்படும்' என எழுதி காத்திருக்கும் ஹை-வே பட்டறைக்காரன், பீடி வலித்துக்கொண்டே குப்பையை அள்ளி நகராட்சி வண்டியில் போடும் துப்புரவாளர், இந்தியாவில் விற்கப்படும் அத்தனை பவுடர்களையும் வியர்வை கலந்து சுவாசிக்கும் பேருந்து நடத்துனர், தினமும் குறைந்தது பத்து பேரிடமாவது திட்டு வாங்கியும் நேரத்திற்கு செல்ல ஹாரன் அடிக்கும் ஓட்டுனர், 'அடுத்து வரும் பாடலை பாடுபவர்கள் உங்கள் எஸ்.பி.பி மற்றும் சின்ன குயில் சித்ரா' எனும் ரேடியோவை கேட்டபடி மெஷின் மிதிக்கும் தையற்காரர், எப்பொழுதும் தலைகனமாய் திரியும் சித்தாள், காதை ரூல் பென்சில் ஸ்டான்டாய் கொண்டிருக்கும் கொத்தனார், ஆந்தையோடு குடித்தனம் நடத்தும் தமிழ் மற்றும் திபெத்திய கூர்க்கா, ஆசுவாசப்படுத்திக்கொள்ள டீயை உறிஞ்சி குடிக்கும் குடும்ப சுமைகளை குறைக்க மூட்டை தூக்கும் மீசைக்காரர், குருவாயூரப்பனையும் மோகன்லாலையும் மறந்துவிட்டு நோயாளிகளுடன் வாழும் மலையாள நர்ஸ், தன்னைவிட முப்பது வருடம் இளையவனுக்கு ஹார்லிக்ஸ் வாங்கிவரும் காக்கிசட்டை பியூன், ஆட்டுக்குட்டிக்கு பஸ் டிக்கெட் எடுக்கணுமா என்ற கவலையுடன் பஸ் ஏறும் விவசாயி, விசேஷத்திற்கு போட்டுக்கொண்டு போகும் சட்டையை தலையணைக்கு அடியில் இஸ்திரி போடும் கைத்தறி நெசவாளி, துணி துவைக்கும் சோப்பிலேயே முகம் கழுவி சாப்பிட தயாராகும் மெக்கானிக், இதுவரை ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பிரதி எடுத்து கொடுத்துவிட்ட ஜெராக்ஸ் கடை முதிர்கன்னி, எக்ஸ்போர்ட் துணி பிசிறுகளை எட்டு மணி நேரம் நின்றுக்கொண்டே வெட்டிப்போடும் தினக்கூலிகள், இயற்கை தந்த மூன்று நாள் லீவில் மூன்றாம் நாளை விரும்பி கேன்சல் செய்துவிட்டு பவுடர் பூசும் விலைமாது, நாய் பொம்மை விற்க நாயை விட அதிகம் குலைக்கும் பொம்மை விற்பவன், மாதம் ஒரு நாள் சம்பள கவர் வாங்க தினமும் ஆயிரம் கவர்களை டெலிவரி செய்யும் கொரியர் இளைஞன், மற்றவர்கள் காலில் கற்பழிக்கும் செருப்பை கையால் தடவி வேலை செய்யும் வெத்தலை வாய்க்கார செருப்பு தைப்பவன், கஞ்சனையும் கடவுளாக்கும் குருட்டு பிச்சைக்காரன், மீன் பிடிக்க போய் கருவாடாய் திரும்பி வரும் மீனவன், சோப்புகளை தூக்கிக்கொண்டு வீதி வீதியை அலையும் விற்பனை பிரதிநிதி, களைப்பு தெரியாமல் இருக்க கட்டிங் போட்டுவிட்டு கண்களால் கற்பழிப்பவனுக்கு ஆடிக்காட்டும் கரக்காட்டக்காரி, பத்து ரூபாய்க்கு பாயாய் குனியும் பூசாரி, ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து பாணி பூரி விற்கும் உ.பி'காரன், பத்து ரூபாய்க்கு சகல பிரியாணியும் போடும் நடமாடும் டிபன் வண்டிக்காரன், எல்லா அப்பார்ட்மென்ட்வாசிகளையும் தெரிந்து வைத்திருந்தும் இதுவரி யார் வீட்டுக்குள்ளும் நுழைய அனுமதி கிடைக்காத வாட்ச்மேன், டீ மாஸ்டர், பலகார மாஸ்டர், புரோட்டா மாஸ்டர், இந்த சமுதாயத்தை எப்படி நடத்த வேண்டுமென செய்துகாட்டும் பேப்பர் போடும் பையன், பிணத்தையும் சிரிக்க வைத்து போட்டோ எடுக்க கஷ்டப்படும் போட்டோகிராபர், கந்துவட்டிக்காரனுக்கு பாதி பணத்தை சம்பாதித்து கொடுக்கும் மார்கெட் காய்கறி கடைக்காரர்கள், வாழ்கையை வறுமையிலும் வண்ணமயமாய் வாழும் கோல பொடி விற்பவர், நைந்த கைலியுடன் பாய் விற்பவன், முட்டை இலந்தை நவாப்பழம் வெள்ளரி என சீசனுக்கு ஒன்று விற்று போகும் கூடைக்காரிகள், பாத்திரம் தேய்ப்பதற்கு சம்பளம் வாங்கி வீட்டு ஓனர் உடம்பை தேய்த்து போவதை சகித்துக்கொள்ளும் வேலைக்கார பெண்கள், இட்லி விற்கும் ரிட்டயர்ட் ஆகாத ஆயாக்கள், வாரம் நான்குநாள் லீவு விட்டுவிடும் குடிக்கார ஆட்டுக்கால் சூப் கடைக்காரர், ஜில் ஜில் ஜிகர்தண்டா விற்கும் சிடுமூஞ்சிக்காரர் என இந்த தேசத்தில் தான் எத்தனை கோடி மனிதர்கள்? எத்தனை கோடி கனவுகள்? எத்தனை கோடி தொழில்கள்? ஆனால் ஒரே ஒரு முதலாளி......................................................
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் பெயர் 'பசி'...!!!!!
.
.
.
.

................................................................................................................................................................
( "இந்த உலகத்தில் கை இல்லாதவன் உண்டு, கால் இல்லாதவன் உண்டு, வயிறு இல்லாதவன் இல்லை" என்று எங்கோ படித்த கவிதை ஒன்றின் உந்துதலில் எழுதியது )

21 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. J , Disable image verification in comments

    ReplyDelete
  3. ப்ளாக் கலக்கல் , எங்கள மாதிரி ஆளுங்களால இந்த மாதிரி ப்ளாக் தூசு தட்டபடும்ன்ன , நாங்க நிறைய எழுதறோம் ! ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. ஒவ்வொருத்தர்க்கும் ஒரு explanation அருமை பாஸ்!இந்த ஒரு போஸ்ட்லேயே எக்கச்சக்கமான TWEETS
    இருக்கும் போலிருக்கு.மிகவும் நன்றாக இருக்கிறது.இந்த உலகில் எல்லோருக்கும் ஒரே முதலாளி பசியும் பணமும்.WAITING FOR MORE POSTS FROM YOU

    ReplyDelete
  5. ம்ம்ம்.. என்ன ஒரு கூர்மையான அவதானிப்பு பாஸ் :-)பிரத்தீப் சொன்னது போல் /// ஒரு போஸ்ட்லேயே எக்கச்சக்கமான TWEETS
    இருக்கும் போலிருக்கு// நிஜம்தான் !!!

    ReplyDelete
  6. மிக அருமை...இதுபோன்று இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்..

    ReplyDelete
  7. கையக் கொடு மச்சி... கண்ணுல ஒத்திக்கிறேன்...


    ரியலி அட்டகாசம்...

    ReplyDelete
  8. வாங்க..வந்து ஜோதில ஐக்கியாமாகுங்க:-)

    ReplyDelete
  9. நல்ல பதிவு....எழுத்தில் தேர்ச்சி தெரிகிறது! ......இத்தனை கோடி மனிதர்களில்.எதோ ஒரு தொழிலை செய்து கொண்டு...அவ்வப்பொழுது ,மானிட்டர் பார்த்து தனியே சிரித்துக் கொள்ளும்,நம் சக `கீச்சர்`களையும் சேர்த்திருக்கலாம்!

    ReplyDelete
  10. ஒவ்வொரு மனிதனைப் பற்றிய வர்ணனையும், ஒவ்வொரு கவிதைக்குச் சமம். கூர்ந்து அவதானித்தால், ஓராயிரம் சிறுகதைகள் மறைந்து கிடக்கிறது. வாழ்த்துக்கள் தோட்டா!

    ReplyDelete
  11. அருமை... தோட்டா புயல் இனி வலைப்பூவிலும் வீசட்டும்...ஒவ்வொரு மனிதனுக்கான விவரிப்பும் உண்மையும் வலியும் நிறைந்தவை...

    ReplyDelete
  12. புலியின் வயிற்றில் கோடுகள் தெரிவது மரபியல் காட்சி. எளியோன் வயிற்றில் கோடுகள் தெரிவது வறுமையின் நீட்சி!. பசிதீர கிடைக்கலாம் நிறைய பதார்த்தம். ஆனால்,பசிக்காதிருக்க வைத்தியமே கிடையாதென்பதே யதார்த்தம்!.பசிக்கு ருசிக்கலாம்.ஆனால், பசியை ரசிக்க முடியாது!. பசியில் விழுந்த மனிதனுக்கு காட்டுவிலங்கில் பாதி வீரியமுண்டு. பசிசூழ் பெருவுலகில் தோட்டாவின் இப்பதிவுக்கும் அவசியமுண்டு!.பதிவும் நன்று!!.

    ReplyDelete
  13. இத்தனை மனிதர்களை அடையாளம் கண்டு பதிவு செய்த உங்கள் ஈர மனதுக்கு பாராட்டுக்கள்.இந்த பதிவு ஒரு சிலருக்கேனும் மூடிய கண்களைத் திறக்கும்.
    சொக்ஸ்

    ReplyDelete
  14. அண்ணா.. இதெல்லாமே நாம பாக்கிற ஆட்கள்தான், ஆனா எல்லோரையும் ஞாபகம் வச்சு எழுதுறது ரொம்ப ரொம்ப சிரமம். ரொம்ப ரொம்ப கலக்கல் அண்ணா :) உங்க ட்விட்டுகளில் இருக்கிற அதே எதார்த்தம் இந்தப் பதிவிலும் :))

    ReplyDelete
  15. மன்மதகுஞ்சுDecember 10, 2011 at 9:43 PM

    பசிக்கான தாகத்தில் மனிதத்தின் பாத்திரங்கள் சில ஆனாலும் அவற்றை தொகுத்தது அருமை தோட்டா..

    ReplyDelete
  16. சூப்பர்!! நம்ம சுற்றி இருக்கும் கதாபாத்திரங்களின் நுணுக்கமான தொகுப்பு சிறந்த பன்ச்சுடன். பல கதாபாத்திரங்களுக்கான வர்ணனை ”அட” போட வைத்தது.(முதிர்கன்னி, வாட்ச்மேன், மீனவன், கண்டக்டர், கொரியர் பாய்...)மச்சி, ரொம்பநாளாவே நீ ரவுடியா? வாழ்த்துகள். தொடர்ந்து எழுது.

    ReplyDelete
  17. இப்படியும் எழுதலாமா என்று வியக்கவைக்கும் நடை எப்போதும் போல் இன்றும் .....வியந்தேன்

    ReplyDelete
  18. உங்க tweet ஐ படிச்சிட்டு உங்களோட ரசிகை ஆகி, இப்போ உங்கப் பதிவுக்கும் ரசிகை! super like:) Please keep writing...God bless U always!

    ReplyDelete