Monday, October 1, 2012

சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு.!

அன்பு நண்பன்(ர்) அதிஷாவுக்கு, சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு குறித்த உங்கள் அனைத்து ட்வீட்டுகளையும் படித்தேன், பெரும்பாலான உங்கள் கருத்துகளோடு ஒத்தும்போகிறேன்.

அதிலும் முக்கியமாக, >>>வால்மார்ட் கம்பெனிக்காரன் ரங்கநாதன் தெரு அண்ணாச்சிங்களைவிட நல்லாவே தொழிலாளிகளை நடத்துவானு நம்பறேன்!<<< இந்த உங்களின் கருத்து மிக மிக உண்மை.

முதலில் நான் பொருளாதார மேதை கிடையாது, உங்களோடும் நம்ம காதல் இளவரசன் கார்க்கியோடும் கிரிக்கெட் விளையாடும் சாதாரண சிறுவனே. எனக்கு தெரிந்த / புரிந்த கருத்து ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இந்தியா போன்ற முதல் தர / இரண்டாம் தர மற்றும் டூப்ளிகேட் பொருட்கள் அதிகம் விற்பனையாகும், எல்லா வித பொருளாதார கலவையான மக்கள் வாழும் தேசத்தில் அன்னிய தேச முதலீடுகளால் பெரிதும் பாதகமும் இல்லை, சாதகமும் இல்லை. உண்மையை சொல்ல போனால், சில்லறை விற்பனையில் இந்திய அரசு நேரிடையாக தலையிடாமல் இருந்தால் போதும், அதுவே மக்களுக்கு பெரும் நன்மை பயக்கும். அன்னிய முதலீடுகளால் உற்பத்தியாளர்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் முற்றுலுமாக பாதிக்கப்படும் என்பதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாத விஷயமே. { கொக்ககோலாக்கள் வந்ததால் குண்டு சோடாக்கள் அழிந்தன என்ற வகையான வாதங்கள் தவறு தான். உள்நாடோ வெளிநாடோ, உலக வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றுயமைக்காத / திருத்தியமைக்காத எந்த தொழில் நிறுவனமும் இழுத்து மூடித்தான் போகும். சிறந்த உதாரணம், தன்னை காலத்தோடு மாற்றியமைத்து கொண்ட Cavincare (Chik Shampoo fame ) நிறுவனம் இன்னமும் மற்ற நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாளராக இருப்பதே. } அதே சமயம் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வருவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் லாபம் அடைவார்கள் என இந்திய அரசு சொல்வது எவ்வளவு உண்மையோ, அதே போல நுகர்வோர்களும் பாதிப்பு அடைவார்கள் என்பதும் உண்மையே. ஆனால் மேலே கூறியது போல இந்திய நுகர்வோர்கள் ஒரே வகையை சார்ந்தவர்கள் அல்ல, ஒரு காபியை 150 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கும், ஏன் 10 ரூபாய்க்கும் குடிக்கும் பல பிரிவானவர்கள். அவர்களுக்கு தேவையானதை தேவையான இடத்தில வாங்கிக்கொள்வார்கள் என்பதே உண்மை. அதே சமயம் ஆரம்பத்திலோ இல்லை எப்பவுமேவோ சில்லறை விற்பனைக்காக அடிப்படை உற்பத்தியாளர்களிடம் பெரும் விலை கொடுத்து ஒரு பொருளை வாங்குவதால், அந்த பொருள் சிறு வியாபாரிகளுக்கு போய் சேருவதில் சிக்கலும் வரும். { சாதாரண உதாரணமாக, பெரும் விலை கொடுத்து நிலகடலையை விவசாயிகளிடம் வாங்கினால், யாவரும் லாப கணக்கு பார்த்து இவர்களுக்கு தான் தருவார்கள், அப்போ பீச்சுல கடலை விக்கிறவங்க, கொள்முதல் பண்ண கடலை இல்லாம பாதிக்கப்படத்தானே செய்வாங்க? மீறி கொள்முதல் பண்ணினாலும் அதிக விலைக்கு தானே வாங்க முடியும்? அது கடற்கரையில் கடலை போடுறவன் தலையில தானே விழும்? } மேலும் கிடைக்காத / அல்ல இங்கு விலை அதிகமா விற்கும் ஒரு பொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பும் அதிகம். உதாரணதிற்கு, நமது முதல் எதிரியும், உலகின் பெரும் ஏற்றுமதியாளருமான சீனாவும் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்து உள்ளது. Wal-mart, JYSK, Metro, Carrefour, IKEA போன்ற நிறுவனங்கள் அங்கு இருக்கும் கடைகளுக்கு, அங்கு வாங்கும் விலை அதிகமென, எங்கள் நிறுவனத்தில் சில கைத்தறி பொருட்கள் வாங்கி சீனாவிலேயே விற்கவும் செய்கிறது. இது இது சீன நுகர்வோர்களுக்கு லாபம் என்றாலும், சீன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு தானே?

ஆக நான் சொல்ல வருவது, சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டால் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு, ஆக ஒரு சிறந்த பத்திரிக்கையாளராக அதன் சாதகம் மட்டும் பேசாமல் பாதகமும் பேச அன்போடு விழைகிறேன். ஏனெனில், நாங்கள் சொல்வதை விட உங்களை போன்ற ஆளுமைகள் சொன்னால், இன்னமும் பல பேருக்கு அதன் சாதக பாதகங்கள் புரியும்.

பேயோன் அய்யா அவர்களுக்கு...

மரியாதைக்குரிய பேயோன் அய்யா அவர்களுக்கு,

இஸ்மாயில்காந்த் எனும் எனக்காக என் நண்பன் தோட்டா எழுதுவது. எனக்காக அவன் ஏன் எழுதுகிறேன் என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். நம் நாட்டில் எழுத படிக்க தெரியாதவர்கள் இருப்பது போல, இஸ்மாயில்காந்த் எனும் நான் படிக்க தெரிந்து எழுத தெரியாதவன்.

அய்யா, நான் துப்பறியும் கதைகளின் தீவிர ரசிகன். சென்ற வார வாக்கில் உங்களின் துப்பறியும் கதை ஒன்றை விகடன் புத்தகத்தில் படிக்க நேர்ந்தது. க்ரைம் மன்னன் ராஜேஷ்குமாருக்கு பிறகு நீங்கள், உங்கள் அருமையான துப்பறியும் கதையால் என்னை, கயிறே கட்டாமல் கவர்ந்து இழுத்து விட்டீர்கள்.

கணேஷ் வசனத்தை விட, விவேக்கை விட, ஏன் நாவல்களின் நாயகி ( அய்யா, ஆங்கில Navel அல்ல ) ரூபலாவை விட உங்களின் இன்ஸ்பெக்டர் குமார் கதாபாத்திரம் என்னை, என் மூக்கு மேல் மட்டும் அல்லாமல் கண்ணின் மீதும் விரல் வைக்க வைத்து விட்டது. ( ///கண்ணின் மீதும் /// காரணம் எனக்கு சின்ன மூக்கு )

அதே ஒன்றை டன் ஆவலில் இந்த வார விகடன் வார இதழில் உங்களின் துப்பறியும் கதை ஒன்றை படித்தேன்.

முதலில் எனக்கு வந்த சந்தேகம், லட்சக்கணக்கில் ஒரு வைரத்தை இன்சுரன்ஸ் செய்யும் அளவு விவரமானவரும், வைரத்தையும் இன்சுரன்ஸ் பணத்தையும் ஒரு சேர ஆட்டைய போடுமளவு திட்டமிடும் புத்திசாலியும், CCTV'யில் நிகழ்வுகள் ரெக்கார்டு ஆகும் என தெரிந்து வைத்த அதிபுத்திசாலியான நம்ம ராஜஸ்தான் சேட்டு ( எனக்கு சேட்டு என்றாலே ராஜஸ்தான் தான், மன்னிக்க ) ரெக்கார்டு ஆன DVD'ய மட்டும் உருவிட்டு போக வேண்டியது தானே? இவ்வளவு விவேகமானவர் அதுக்குள்ளே இன்னொரு DVD'ய தேவையில்லாம வைப்பாரா?

எனது இரண்டாவது சந்தேகம், CCTV DDRக்குள் எங்கு வந்தது DVDயும், DVD Playerரும்? ( பார்க்க பத்தி 2, வரி 18-23 )

எனது மூன்றாவது சந்தேகம், ஒரு வேளை ரெக்கார்டு ஆனா நிகழ்வுகளை DVDக்கு மாற்றி, அந்த டிவிடிக்கு பதிலாக வேறு டிவிடி மாற்றப்பட்டு இருந்தாலும், பதிவானது DDR மெமரியில் இருக்கும். ( அழிக்கப்பட்டதாக இன்ஸ்பெக்டர் குமாரும் நீங்களும் கூறவில்லை )

அய்யா, அதுமட்டுமின்றி, செல்போன் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கும், என் நண்பன் லால்பகதூர் ராவுத்தரை கேட்டபோது, அவன் சொன்னது, எந்த ஒரு வீடியோ நிகழ்வும் நேராக DDR எனப்படும் ஒரு வகையான ஹார்ட் டிஸ்க்கில் சென்று பதிவாகுமே நேரடியாக DVDக்கு செல்லாது. இந்த ஹர்ட் டிஸ்க்கின் கெப்பாசிட்டி குறைந்தது ஒரு வார கால நிகழ்வுகளையாவது சேமித்து வைக்கும் அளவு தான் எல்லோரும் பயன்படுத்துகிறோம். CCTVல் பதிவான ஒரு வீடியோவை கணிப்பொறியில் இணைத்து இடம் மாற்றியோ, ரைட்டர்களுடன் வரும் மிக சொச்ச DDR ஹார்ட் டிஸ்க்கின் மூலம் குறிப்பிட்ட பகுதியை DVDயில் பதிவு செய்தோ தான் தனியாக போட்டு பார்க்க முடியும். மேலும் CCTV எவ்வளவு குறைந்த ரெஷல்யூஷனில் படத்தை படம் பிடித்தாலும் ஒரு நாளின் நிகழ்வுகளை ஒரு DVDக்குள் அடக்க முடியாது, குறைந்தது என் கணிப்பின் படி 5ஜிபி ஆவது இருக்கும். வீடியோ நூலகத்திலும் மேற்கூறிய இதே லாஜிக் தான் நடக்கும்.

பாத்ரூமுக்குள் வழுக்கி விழுந்து இறந்த மர்மத்தையே கண்டறிந்த துப்பறியும் சிங்கமான என் தலைவன் இன்ஸ்பெக்டர் குமாரை, சாதாரண விஷயம் கூட தெரியாத காமா சோமா போலீசாக காட்டியதற்கு என் கடும் கடும் கண்டனங்கள்.

ஒரு வேளை நீங்கள் இதுவெல்லாம் எழுதி விகடனால் பிரசுகரிக்கபடாமல் விடப்பட்டிருந்தால், விகடன் தாத்தாவுக்கும் இந்த 'துப்பறியும் இன்ஸ்பெக்டர் குமார்' சமூகம் கண்மூடித்தனமான தன் கடும் கண்டனங்களை தெரிவிக்கும்.

வேண்டுகோள் 1: அய்யா, இதுக்காக என் நண்பன் தோட்டாவை தயவு செய்து Block செய்து விட வேண்டாம், ஏனெனில் அவன் மதர் சுப்பிரியர் போன்ற பெண்களால் Block செய்யப்படுவதை ( மட்டும் ) பெருமையாக கருதுபவன். மேலும், அந்த அறியா சிறுவன் உங்களின் அதிதீவிர வாசகன் / ரசிகன்.

வேண்டுகோள் 2: தயவு செய்து இந்த வாசகர் கடிதத்தை உங்கள் Blogகிலோ, விகடன் புத்தகத்திலோ போட வேண்டாம், ஏனெனில் எனக்கு விளம்பரம் புடிக்காது.

வேண்டுகோள் 3 :
அய்யா இதற்கு எதிர்வினை எல்லாம் எதிர்பார்க்கவில்லை, உங்கள் சாமுராய் சாமியார்களிடம் சொல்லி செய்வினை வைக்கமல் இருந்தால் போதும். ஒரு சிறு முயற்சியாக உங்களை போல கிண்டல் பண்ண முயற்சித்தேன், அவ்வளவே. லால்பகதூர் ராவுத்தரும் பெரிய புத்திசாலி அல்ல, தவறு இருந்தால் மன்னிக்கவும்.

வாஞ்சையுடன்
தோட்டா டைப்ப டைப்ப சொல்லிய இஸ்மாயில்காந்த்
செயலாளர், தென்னகத்து புது ஜேம்ஸ்பாண்ட் இன்ஸ்பெக்டர் குமார் நற்பணி மன்றம், கோவில்பட்டி கிளை. ( பதிவு எண் 14854 / 2012 )

Wednesday, August 15, 2012

குறுங்கதை - 3 : அரோகரா.!

'சாவடிக்கிறாங்கடா மாப்ள' என்றான் செல்வா, போனை அணைத்துக்கொண்டே .

ஏன்டா என்னாச்சு? - இது நான்.

'திருத்தணி இப்போ வேண்டாமாம், மொதல பழனிக்கு போக சொல்றாங்க, கடுப்பேத்தறாங்க மை லார்ட்'...

ஹாஹாஹா, சரி, நம்ம வேலை அதானே, செய்யும் தொழிலே பணம், சலிச்சுக்ககூடாது, வண்டிய விடு...

'எல்லாம் பண திமிருடா, இவனுங்களுக்காக நாம லோல்பட வேண்டியாதா இருக்கு'

அந்த திமிர் இருக்கிற வரை தான், நமக்கு சோறு, ஆக்சிலேட்டர அமுத்து கண்ணா..

மொதல மருதமலை, அப்புறம் திருத்தணி, இப்போ கடைசில பழனியாம், எல்லா முருகரும் ஒன்னு தானடா?

எல்லாமே ஜூசுமே நல்லாத்தான் இருக்கு, வயிர நிரப்புது, நீ ஏன் எப்பவுமே பைனாப்பிள் ஃப்ளேவரே குடிக்கிற?

அய்யா அரிஸ்டாட்டிலே போதும் உங்க தத்துவ மழை...முடியல...

ஹாஹாஹா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் ஓட்டுறேன், பழனி வந்தா எழுப்பி விடுறேன்...

தூரத்தில் தெரிந்தது பழனி மலை. மலை மேல் ஓம் முருகா என்ற நியான் விளக்கு போர்டு எங்களை அன்புடன் வரவேற்றது.

செல்வா, ம்ம்ம்ம் செல்வா, மொதல Solar Depthrazer வச்சு மலைய சுத்தி 200 மீட்டர் ஆழத்துக்கு, 2 மீட்டர் அகலத்துக்கு குழி வெட்டு. அப்புறம் மலைய சுத்தி 20அடிக்கு ஒரு எலக்ட்ரோ stonetic சங்கிலியை ஒட்ட வை. நாப்பது ரோபோவ விட்டு பூமியோட ஒட்டி இருக்கிற மலையோட அடிபகுதிய வெட்ட சொல்லு. ம்ம்ம், சீக்கிரம், டூ இட் ஃபாஸ்ட் மேன்' என்று சொல்லிக்கொண்டே ஒரு எலக்ட்ரானிக் சிகரெட்டை பற்றவைத்தேன்.

ரோபோவுக்களுக்கு களைப்பு தெரியாம இருக்க 'அரோகரா அரோகரானு' கூவ சொல்லட்டுமா என்று கண்ணடித்தான்.

நாற்பது நிமிடம் கரைந்தது, கொஞ்சம் லேட்தான்.

பழனி மலை எங்கள் விண்கலத்துடன் இப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்தது. எல்லாம் நான்காம் உலகப்போருக்கு பின் செயலிழந்த பூமியில் எஞ்சி, க்லூட்டோ கிரகத்தில் குடியமர்த்தப்பட்ட பணக்கார தமிழர்களுக்காக.

**********
டவுட்டு : அது பழனியா? பழநியா?