Friday, June 22, 2012

முயற்சி 1

ஒரு பந்தயம், இந்த குறுங்கட்டுரையை நீங்கள் இரண்டாம் முறை படிப்பீர்கள்.
கண்கள் முக்கியம். இந்தியாவின் பலமே நல்ல நல்ல கண்கள் தான். கண்கள் மட்டுமில்லையென்றால் இந்த பூலோகத்தில் மனிதர்கள் வாழ்வதே வீண். பார்த்தவுடனே பிடித்து போய்விடும் சில கண்களை, பார்க்க பார்க்க பிடித்து போகும் சில கண்களை. கண்கள் எப்பொழுதும் அழகு தான் எனினும் , சில கண்களுக்கு கண்ணாடி அழகு, சில கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருப்பதே அழகு. கண்களே அழகு, அதிலும் கண்கள் சிரிப்பது சிதறடிக்கும் அழகு. ஒவ்வொரு கண்ணும் அழகு தான் எனினும், பார்த்தவுடன் கிறக்கத்தை உண்டு பண்ணும் கண்களும் உண்டு இந்த தேசத்தில். குற்றம் செய்த குறுகுறுக்கும் நெஞ்சுள்ள ஆண்கள் கண்களை பார்த்து பேசவே பயப்படுமளவு பவர் இருக்கிறது கண்களிடம். ஆண்களுக்கு ஒரு சாபம் உண்டு, அது கண்களை பார்த்து எந்நாளும் மனதில் ஓடும் எண்ணங்களை கண்டறிய முடியாததே அது. உண்மையான ஆண்மகன், கண்களின் கண்ணீரை கண்டு சும்மா இருக்க மாட்டான், ஏனெனில் கண்கள் கலங்கப்படுவது கண்களுக்கும் அழகில்லை, கொண்டிருக்கும் ஆண்களுக்கும் அழகில்லை. அங்கும் இங்கும் அலைபாயும் கண்கள் சிறியன, பெரியன, பலவகை; ஆனால் சந்தேமாய் பார்ப்பதில் எல்லா கண்களும் ஒரே வகை. இப்படிப்பட்ட அழகான கண்களிடம் பிடிக்காத ஒரே விஷயம், பல நேரம் வேறு கண்கள் அழுவதை பார்த்துக்கொண்டு தொலைக்காட்சி மெகா சீரியல்களில் மூழ்கிவிடுவது தான். கண்களிடம் ஒரே சிறு குறை, அவைகளின் பார்வைகள் டிவிகளின் மேல் விழுவதை விட புத்தகங்கள், பத்திரிக்கைகள் மேல் இன்னமும் கொஞ்சம் விழலாம்.
பின்குறிப்பு :
மன்னிக்கவும், சிறிது தவறு நடந்து விட்டது, இங்கு பெண்கள் என அச்சடிப்பதற்கு பதிலாய், கண்கள் என அச்சடிக்கப்பட்டு விட்டது.

No comments:

Post a Comment