Friday, June 22, 2012

குழந்தைகள்.!

குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருப்பதன் காரணம், அவர்கள் குழந்தைகளாய் இருப்பதால் மட்டும் தான். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று வகையான குழந்தைகள் இருக்கிறார்கள்; பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் மற்றும் சூப்பர் குழந்தைகள். மற்ற குழந்தைகள் ஸ்கூலுக்கு போவார்கள், சூப்பர் குழந்தைகள் ஷூட்டிங்கும் போவார்கள். மற்ற குழந்தைகள் பாடம் படிப்பார்கள், சூப்பர் குழந்தைகள் படப்பிடிப்பிலும் நடிப்பார்கள், பாட்டு பாடுவார்கள், ஆட்டமும் ஆடுவார்கள். சுமார் குழந்தைகள் பாஸாவார்கள், சூப்பர் குழந்தைகள் பர்ஸ்ட் மார்க் வாங்குவார்கள். நூறுக்கு நான்கு பேர் தான் சூப்பர் குழந்தைகள் எனினும், அவர்களின் தாக்கம் மற்ற குழந்தைகளின் மேல் அதிகம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சூப்பர் குழந்தைகளாக இருக்கவே விரும்புகிறார்கள். சூப்பர் குழந்தைகள் தான் சூப்பராக இருக்க கொடுக்கும் விலைகள் என்ன தெரியுமா பெற்றோர்களே? தங்கள் குழந்தைதனத்தை.!!! ஒரு குழந்தையுடன் மற்றொரு குழந்தையை ஒப்பிடுவதை விட குழந்தைகள் மீதான பெரிய வன்கொடுமை வேறெதுவுமில்லை. நீங்கள் பத்து மாதம் சுமந்து ஒரு முறை தான் பிரசவிக்கிறீர்கள், ஆனால் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பத்து மாதம் பாடம் படித்து ஒவ்வொரு வருடமும் பிரசவிக்கிறார்கள்.! மீதமிருக்கும் இரண்டு மாதத்தையும் கோடை வகுப்புகளில் சிறை வைத்து சித்தரவதை செய்யாதீர்கள். இசையோ, நடனமோ, கணினி அறிவோ, யோகாவோ, சதுரங்க ஆட்டதிறனோ, ஹிந்தியோ, ப்ரெஞ்சோ வேறு இரண்டு மாதங்களில் வந்து விடாது. இந்த இரண்டு மாதங்களை குழந்தைகளின் குணநலன்களை மேம்படுத்த பயன்படுத்துங்கள். கடந்த பத்து மாதம் குழந்தைகளுடன் ஏற்பட்ட இடைவெளியை இந்த இரண்டு மாதங்கள் நிரப்புங்கள். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட்டு முதலில் நாம் பெரியவர்கள் என காட்டுவோம். புரிந்துக்கொள்ளுவோம், எல்லா குழந்தைகளும் சூப்பர் தான், சூப்பர்களும் முதலில் குழந்தைகள் தான்.!

No comments:

Post a Comment