படம் ஆரம்பிச்ச பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கிறப்ப, பக்கத்து சீட்டுக்கு பால் காய்ச்ச வரவன், உட்காருவதற்கு முன்னாலையே நம்மள கேட்பான் 'படம் போட்டு எவ்வளவு நேரமாகுது'ன்னு; பத்து நிமிஷமாவது, அதுக்காக போயி சூசைடா பண்ணிக்க போற? படத்த பாக்கத்தானே போற? ஏன்டா கொல்றீங்க? புள்ளையாரு மாதிரி நாலு கை இருந்தாகூட பரவாயில்ல, இருக்கிற ரெண்டு கையில மொத்த குடும்பத்துக்கும் இடைவேளைல அரை டன் பாப்கார்ன வாங்கிட்டு தள்ளாடி போறப்பத்தான், நெருங்கி வந்து 'என்ன சினிமாவுக்கா?'ம்பான் மானஸ்தன் ஒருவன். ஏன்டா டேய்ய்ய்ய், பித்தள பாத்திரம் திருடி பேரீச்சம்பழம் தின்னவனே, தியேட்டர்ல படம் பார்க்க வராம, பாத்ரூம் கழுவவாடா வருவாங்க?
சென்னை வானிலை மையம் சொல்ற வானிலை அறிக்கை கூட சிலசமயம் சரியா இருக்கும், ஆனா இந்த தேசத்துல எப்பவுமே சரியா கணிக்க முடியாதது ரயில் வரும் நேரம் தான். எனக்கு தெரிஞ்சு ஒரு மணி நேரம், ஒரு நாள், ஏன் ஒரு வருஷம் லேட்டா வந்த ரயிலு கூட இருக்கு. இந்த லட்சணத்துல ரயிலு எப்போ வருமுன்னு காத்திருக்கும் போதுதான், நம்மகிட்ட வந்து 'ரயில் போயிடுச்சா'ம்பான் நல்லவன். ஏன்டா உலுத்துப்போன உளுந்தூர்ப்பேட்டை உலகநாதா, நான் ப்ளாட்பாரத்துல பிச்சை எடுக்கவாடா வந்தேன், ரயில் வந்திருந்தா நான் ஏன்டா இங்க நிக்கறேன்?
கல்யாணத்துக்கு வந்தோமா, வண்டி வண்டியா வடைய தின்னோமா, வயிர நப்பினோமான்னு இல்லாம, கை கழுவுறப்ப தான் 'என்ன ரொம்ப வெயிட் போட்டுடீங்கன்னு' கேட்பாங்க, ஆமாயா, சட்ட பாக்கெட்டுல ரெண்டு சிமென்ட் மூட்டை வச்சிருக்கேன், பேன்ட் பாக்கெட்டுல ராணா டார் முறுக்கு கம்பிய சுருட்டி வச்சிருக்கேன், ஏன்யா படுத்தறீங்க பாவிங்களா?
பஸ்சுல போடுற மொக்க படத்த அறைதூக்கத்துல முழிச்சு பார்த்துக்கிட்டு இருக்கறப்பத்தான் 'என்ன தூக்கம் வருதா?'ம்பாரு பக்கத்து சீட்டு பழைய சோறு அப்பரண்டீசு; இல்லங்க வாந்தி வருது, உங்க வாஷ் பேசின் மூஞ்சிய காட்டுங்களேன்னு சொல்ல நினைப்பேன். பொண்ணு கிடைக்காம அவனவன் மனசுல புண்ண சுமந்துகிட்டு இருக்கான், இவிங்க விஷேஷத்துல பார்க்கும் போது தான் 'கல்யாணமாயிடுச்சான்னும்பாங்க; ஆமாங்க நாலு தடவை ஆயிடுச்சு, இப்போ அஞ்சாவது முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன், உங்க பொண்ணு என்னா பண்ணுதுன்னு கேட்ட தோணும்.
வேக்காடு தாங்காம மொட்டைமாடிக்கு தூங்க போனா, 'என்ன கரண்ட் கட்டா?'ம்பாரு பக்கத்துக்கு வீட்டுக்காரரு, வர கடுப்புக்கு இல்லைய்யா கே.ஆர்.விஜயா நாடகம் பாக்க வந்தேன்னு சொல்ல நினைப்பேன்.
கரக்காட்டக்காரன் படத்துல கவுண்டமணி 'என்னை பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட'ன்னு செந்தில எத்தி எத்தி உதைக்கிற மாதிரி, இந்த நிஜ வாழ்க்கையிலும் தேவையற்ற பார்மாலிட்டி கேள்வி கேட்டே, நம்மள நோகடிக்கவே பொறந்திருக்கிற மண்ட மேல இருக்கிற கொண்டைய மறந்த வண்டவாளங்கள என்னைக்காவது ஒரு நாள் பதிலுக்கு நாம கடுப்பெத்தாம விடக்கூடாது? இதான் நம்ம வாழ்க்கை லட்சியம்.!
No comments:
Post a Comment