Friday, June 22, 2012

புதிய ஜனாதிபதி.!

வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கான புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற போகிறதாம். இப்பவே எல்லா கட்சிகளும் மண்டைய பிச்சுகிட்டு கிடக்கிறாங்க. நல்லெண்ண, விளக்கெண்ண, கடலெண்ண, எவன் எக்கேடு கேட்டு போனா எனக்கென்னன்னு இல்லாம, முப்படை தளபதிக்கான தேர்தலில் எதோ நம்மாலான நாலு கேன்டிடேட்களை பரிந்துரைத்து நாமும் புண்ணியம் தேடிக்கொள்வோம்.

முதலாவது கேன்டிடேட் கேப்டன்; உலகத்தில் உள்ள 214785 தீவிரவாதிகளையும் அறிந்தவர் இவர், அத்தனை தீவிரவாதிகளுக்கும் தெரிந்தவர் இவர். தாடி வைத்தவன் மட்டுமே தீவிரவாதியல்ல என்ற பேருண்மையை கண்டறிந்த புள்ளி விபர கில்லி இவர். பாகிஸ்தான் முதல் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா, பூட்டான் என பயோரியா பல்பொடி விற்கும் நாடுகள் வரை சென்று தீவிரவாதிகளை பிடித்த பெருமைக்குரியவர். பாகிஸ்தானுடன் போர்வந்தால் வாஹா எல்லை சுவரில் இடது காலை வைத்து வலது காலால் எட்டி உதைத்தே பாக். ராணுவத்தை குதறி கொத்து புரோட்டா போடும் ஆற்றல் மிகுந்தவர். இவரது காலுக்கு மட்டும் Missed Call 'ஏ ஆகாது. இவர் நாக்கை துருத்தி வைத்திருக்கும் போட்டோவை இந்திய எல்லையில் வைத்தால், சீன ராணுவம் நம் பக்கமே எட்டி பார்க்காது.

அடுத்தது பாவகவுடா; உண்மையில் ஜனாதிபதி பதவிக்கு மிகசிறந்த போட்டியாளர் இவர். ஐம்பதாயிரம் பேர் அமர்ந்திருக்கும் மெகா மாநாட்டிலும் கச்சிதமா கண்மூடி தூங்கும் திறமை வாய்ந்தவர். சட்டை பாக்கெட்டில் இடியே விழுந்தாலும் சிறு கொட்டாவியுடன் கடந்து போகும் நியாயஸ்தன். IPL விளையாடும் மைதானத்தில் கூட மயங்கி தூங்கும் மானஸ்தன். எப்போதும் பொங்கல் தின்று தூங்குவது போல முகம் வைத்திருக்கும் இவரிடம் பேசி என்ன பியோஜனம் என்று பாகிஸ்தான் கூட தன் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளும்.

மூணாவது குப்புறமணிய சாமி; உகாண்டாவில் ஒட்டகம் செத்ததற்கு ஒபாமா எப்படி காரணம்? பெங்களூர் பல்கலைகழகத்தில் பாத்ரூம் சரியாக கழுவப்படாத பின்னணி என்ன? அண்ணா நகர் முதல் தெரு டிரைனேஜ் அடைச்சதுக்கு பின் இருக்கும் ஆஸ்திரேலியாவின் சதி என உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அணைத்து நிகழ்வுகளுக்கும் சாட்சிகளை சட்டைப்பையிலும் பேன்ட் பாக்கெட்டிலும் வைத்துக்கொண்டு அலைபவர். ஐநா சபைக்கே தலைவராகும் திறமை பெற்றவர் இவருக்கு பிரச்சனையே 17.3 செ.மீ இருக்கும் வாய்தான்.

நான்காவது நொந்தபாலு; இவர் உலக உருவபொம்மை உருவாக்குவோர் சங்கத்தின் வாழ் நாள் சாதனையாளர் விருது வாங்கிய பெருமைக்குரியவர். இதுவரை இவரது 478563 கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் முறியடிக்கப்படாத சாதனையாக விளங்குகிறது. பொறுமையின் சிகரமான இவர், சீனாவை குறுகுறுவென உத்துபார்த்தே ஓட வைக்கும் திறமை வாய்ந்தவர்.

ஆயிரம் பேர் வந்தாலும் நம்ம டின்மோகன் சிங் அவர்களை போல ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பது கடினம். அவர் பெயரையும் சீட்டில் பேர் எழுதி குலுக்கி போட்டு பார்க்கலாம்.

No comments:

Post a Comment