Monday, October 1, 2012

சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு.!

அன்பு நண்பன்(ர்) அதிஷாவுக்கு, சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு குறித்த உங்கள் அனைத்து ட்வீட்டுகளையும் படித்தேன், பெரும்பாலான உங்கள் கருத்துகளோடு ஒத்தும்போகிறேன்.

அதிலும் முக்கியமாக, >>>வால்மார்ட் கம்பெனிக்காரன் ரங்கநாதன் தெரு அண்ணாச்சிங்களைவிட நல்லாவே தொழிலாளிகளை நடத்துவானு நம்பறேன்!<<< இந்த உங்களின் கருத்து மிக மிக உண்மை.

முதலில் நான் பொருளாதார மேதை கிடையாது, உங்களோடும் நம்ம காதல் இளவரசன் கார்க்கியோடும் கிரிக்கெட் விளையாடும் சாதாரண சிறுவனே. எனக்கு தெரிந்த / புரிந்த கருத்து ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். இந்தியா போன்ற முதல் தர / இரண்டாம் தர மற்றும் டூப்ளிகேட் பொருட்கள் அதிகம் விற்பனையாகும், எல்லா வித பொருளாதார கலவையான மக்கள் வாழும் தேசத்தில் அன்னிய தேச முதலீடுகளால் பெரிதும் பாதகமும் இல்லை, சாதகமும் இல்லை. உண்மையை சொல்ல போனால், சில்லறை விற்பனையில் இந்திய அரசு நேரிடையாக தலையிடாமல் இருந்தால் போதும், அதுவே மக்களுக்கு பெரும் நன்மை பயக்கும். அன்னிய முதலீடுகளால் உற்பத்தியாளர்கள் உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் முற்றுலுமாக பாதிக்கப்படும் என்பதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாத விஷயமே. { கொக்ககோலாக்கள் வந்ததால் குண்டு சோடாக்கள் அழிந்தன என்ற வகையான வாதங்கள் தவறு தான். உள்நாடோ வெளிநாடோ, உலக வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை மாற்றுயமைக்காத / திருத்தியமைக்காத எந்த தொழில் நிறுவனமும் இழுத்து மூடித்தான் போகும். சிறந்த உதாரணம், தன்னை காலத்தோடு மாற்றியமைத்து கொண்ட Cavincare (Chik Shampoo fame ) நிறுவனம் இன்னமும் மற்ற நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாளராக இருப்பதே. } அதே சமயம் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வருவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் லாபம் அடைவார்கள் என இந்திய அரசு சொல்வது எவ்வளவு உண்மையோ, அதே போல நுகர்வோர்களும் பாதிப்பு அடைவார்கள் என்பதும் உண்மையே. ஆனால் மேலே கூறியது போல இந்திய நுகர்வோர்கள் ஒரே வகையை சார்ந்தவர்கள் அல்ல, ஒரு காபியை 150 ரூபாய்க்கும், 40 ரூபாய்க்கும், ஏன் 10 ரூபாய்க்கும் குடிக்கும் பல பிரிவானவர்கள். அவர்களுக்கு தேவையானதை தேவையான இடத்தில வாங்கிக்கொள்வார்கள் என்பதே உண்மை. அதே சமயம் ஆரம்பத்திலோ இல்லை எப்பவுமேவோ சில்லறை விற்பனைக்காக அடிப்படை உற்பத்தியாளர்களிடம் பெரும் விலை கொடுத்து ஒரு பொருளை வாங்குவதால், அந்த பொருள் சிறு வியாபாரிகளுக்கு போய் சேருவதில் சிக்கலும் வரும். { சாதாரண உதாரணமாக, பெரும் விலை கொடுத்து நிலகடலையை விவசாயிகளிடம் வாங்கினால், யாவரும் லாப கணக்கு பார்த்து இவர்களுக்கு தான் தருவார்கள், அப்போ பீச்சுல கடலை விக்கிறவங்க, கொள்முதல் பண்ண கடலை இல்லாம பாதிக்கப்படத்தானே செய்வாங்க? மீறி கொள்முதல் பண்ணினாலும் அதிக விலைக்கு தானே வாங்க முடியும்? அது கடற்கரையில் கடலை போடுறவன் தலையில தானே விழும்? } மேலும் கிடைக்காத / அல்ல இங்கு விலை அதிகமா விற்கும் ஒரு பொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பும் அதிகம். உதாரணதிற்கு, நமது முதல் எதிரியும், உலகின் பெரும் ஏற்றுமதியாளருமான சீனாவும் சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதித்து உள்ளது. Wal-mart, JYSK, Metro, Carrefour, IKEA போன்ற நிறுவனங்கள் அங்கு இருக்கும் கடைகளுக்கு, அங்கு வாங்கும் விலை அதிகமென, எங்கள் நிறுவனத்தில் சில கைத்தறி பொருட்கள் வாங்கி சீனாவிலேயே விற்கவும் செய்கிறது. இது இது சீன நுகர்வோர்களுக்கு லாபம் என்றாலும், சீன உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு தானே?

ஆக நான் சொல்ல வருவது, சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டால் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு, ஆக ஒரு சிறந்த பத்திரிக்கையாளராக அதன் சாதகம் மட்டும் பேசாமல் பாதகமும் பேச அன்போடு விழைகிறேன். ஏனெனில், நாங்கள் சொல்வதை விட உங்களை போன்ற ஆளுமைகள் சொன்னால், இன்னமும் பல பேருக்கு அதன் சாதக பாதகங்கள் புரியும்.

No comments:

Post a Comment