Sunday, June 7, 2009

To: கடவுள், சொர்க்கம் Cc: எமதர்மராஜா, வைகுண்டம்



பெறுதல்:
ஏதேனும் ஒரு கடவுள்
சொர்க்கம்

அனுப்புதல்:
ஒரு மனிதன்
பூமி.

காது கேட்காத கடவுளுக்கு,
காணவிரும்புபவன் எழுதுவது....

கோரிக்கைகள் பலவைத்தும்
கணபொழுதும் செவிசாய்க்காமல்
கல்லாய் நிற்பதனால்
காது செவிடென நானே கொண்டேன்;
பிறகு நான் என்ன செய்ய பரம்பொருளே?

முதலில் நாமொரு
முடிவுக்கு வருவோம்;
நம்மில் சிறந்தவர் யார்?

முன் ஆதியில் நீயொரு
மனிதனை படைத்தாய்
பின்பாதியில் நாங்கள்
பலகடவுள்கள் படைத்தோம்,
உதடுகளை திறந்து
உண்மைகளை சொல்
நம்மில் சிறந்தவர் யார்?

மறைந்திருக்கும் பொருளுக்கு
மதிப்பதிகம் என்பதால்
புலப்படாத உன்னை
பெரியவனாக கொள்கிறேன்.

உலகத்தை படைத்தாய் சரி
உடனே தூக்கிஎரிந்தோட
உலகம் என்ன உனக்கு
உசிலம்பட்டி பெண்குழந்தையா?

தாகம் எடுத்தது
பரிணாம வளர்ச்சி,
வேகம் பிடித்தது
பூமியின் சுழற்சி.

அபிராமி அப்ரஹகமாக
அப்ரஹகாம் இப்ராஹிமாக
மனிதர்கள் யாவரும்
அறிவாளிகள் ஆக,
அறிவாளிகளில் சிலர்
உளவாளிகள் ஆக,
மொத்தத்தில் யாவரும்
களவாளிகள் ஆனோம்;

பற்றிக்கொண்டது
நான் பிறந்த பூமி,
அதை பார்க்காமல் நீங்க
எங்க போனீங்க சாமி?

மனித கண்டுபிடிப்பில்
மிச்சம் இருப்பது
'கண்டுபிடிக்காதது எதுவென
கண்டறியும் கருவி' தான்..

'காலையில் ஏழு
கடவுளை தொழு'என
ஒரு கும்பல் உரைக்க;
'மனிதனை நினை
கடவுளை மற' என
ஒரு கும்பல் இடிக்க
எதற்கு வம்பென
இரண்டையும் மறந்தோம்..

அய்யோ சரி சரி,
நடந்து முடிந்தவை
நிறைய இருக்கு,
நடவப்பவை கூறவே
விருப்பம் எனக்கு...

தண்ணீர் விட்டு
பயிர் வளர்த்து - இன்று
கண்ணீர் விட்டு
பயிர் வளர்க்கும்
விவசாய கதைகளை;
உடைகளின் அளவு
குறைய குறைய
நாகரீகத்தின் அளவு
உயர உயரும் கதைகளை;
நாட்டில் ஆண்டவனை விட
நாட்டை ஆண்டவன்
வலிதாகி போன கருமங்களை;

கண்ணில்லா மனிதர்களை
கண்ணிருந்தும் குருடர்களை
கருப்புபண புனிதர்களை
காவியுடை திருடர்களை

வறுமையின் கதறலை
செழுமையின் உதறலை
தாய்மையின் பதறலை
தாய்நாட்டு சிதறலை

மதவாதிகள் சாத்திரத்தை
மேதாவிகள் சூத்திரத்தை
பயந்துபோனவன் மூத்திரத்தை
பொறுமைஇழந்தவன் ஆத்திரத்தை

கந்தக வாசத்தை
காணகிடைக்கா நேசத்தை
பகுத்தறிவாளன் வேசத்தை
பாசக்காரன் மோசத்தை

பியிக்கப்பட்ட நகங்களை
கிழிக்கப்பட்ட உதடுகளை
கசக்கப்பட்ட மார்புகளை
நசுக்கப்பட்ட நெஞ்சுகளை

கண்ணீரை பேனாவில் நிரப்பி
கடிதம் நூறு எழுத வேண்டும்...

பக்கம் பக்கமாய்
துக்கம் சொல்லவேண்டும் நான்...

அதற்குமுன்;
எல்லாம் வல்ல இறைவா
எனக்கொன்று விளக்கிவிடு........

எழுத படிக்க தெரியுமா உனக்கு?

1 comment:

  1. படிக்கத் தெரியுமா உனக்கு"?///

    அருமை..!!! :-))கடவுள் தான் மனிதனின் அதிபயங்கர அழிவுக்கான படைப்பு, அணுகுண்டை விடவும்!!! :-))

    ReplyDelete