Friday, June 22, 2012

Top 10 Movies.!

வாசர்களே, இந்த வாரம் டாப் டென் திரைப்படங்கள் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த வார புதுவரவு புதிதாக எம்.பி ஆகியிருக்கும் சச்சின் டெண்டுல்கரின் 'தோனி'. இவரை பற்றி வரும் வாரங்களில் விலாசமாக பார்ப்போம். தோனி - விளாசட்டும்.

பத்தாவது இடத்தில இருக்கும் சுப்ரமணியசாமியின் 'நான் மகன் அல்ல', ஒன்பதாவது இடத்திலிருக்கும் தங்கபாலுவின் 'உருமி', எட்டாவது இடத்திலிருக்கும் ஞானதேசிகனின் 'ஏழாம் அறிவு' பற்றி போதிய அளவில் அலசி துவச்சு தொங்க போட்டுவிட்டதால், இப்போ ஏழாவது இடத்தில இருக்கும் தாடியாரின் 'திடீர் வீராசாமி' பற்றி பார்ப்போம்.

நீண்ட தூக்கத்தில் இருந்த ஒரு கரடி குட்டி, திடிரென எழுந்து ஆதரவு குதியாட்டம் போடுவதே இந்த கதை. இந்தப்படத்தில் ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் ஆயிரம் பேர் ஒருங்கிணைத்து வேலை செய்திருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஆகா மொத்தம் 'திடீர் வீராசாமி' - ஆள விடு சாமி

ஆறாவது இடத்திலிருக்கும் மன்மோகன்சிங்கின் 'மௌன குரு' பற்றி கடந்த வாரங்களில் மிக நுட்பமாக ஆராய்ந்தோம். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு மிக குறைந்த அளவில் நாயகன் வசனம் பேசும் படம் இதுமட்டும் தான். மொத்தத்தில் மௌனகுரு - முகத்தில் பரு.

அடுத்தது ராமதாசின் 'தேவதாஸ்', சென்ற வாரம் இரண்டாம் இடத்தில இருந்த இப்படம், தொபுக்கடிர் என கீழே விழுந்து ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. பொழுதனைக்கும் '2016 ல் ஆட்சி, டாஸ்மாக்கை மூடு' என திரும்ப திரும்ப வரும் வசனங்கள் சலிப்பை தருகின்றன. மொத்தத்தில் ராமதாசின் 'தேவதாஸ்' - ஆமைதாஸ்.

ஐந்தாம் இடத்தில இருக்கும் ஆந்திரா ஜெகன் ரெட்டியின் 'வேட்டை', நான்காம் இடத்தில இருக்கும் அம்மாவின் 'மங்காத்தா' பற்றி போதிய அளவில் பார்த்து விட்டதால் இனி மூன்றாம் இடத்தில இருக்கும் எடியூரப்பாவின் 'வெங்காயம்'. ஒரு வயசான பெரியப்பா, பெரும்பாடு பட்டு படையப்பாவாக மாற போடும் தில்லாலங்கடி அழுவாச்சி நாடகமே 'வெங்காயம்'. நாயகர் எடியூரப்பாவின் பழுத்த பழம் கெட்டப் பொருந்தி போகிறது. ஆக வெங்காயம் - பெருங்காயம்.

இந்த வாரம் இரண்டாம் இடத்தில இருக்கும் படம் 'அத்வானி - மோடி' இணைந்து நடித்த 'அரசியலில் சொதப்புவது எப்படி?'. மிகுந்த எதிரிப்பார்ப்புகளோடு வெளிவந்து இந்த ஆக்சன் திரைப்படம், மக்களுக்கு காமடி படமாக மாறியது கவலை அளிக்கிறது. அத்வானி வரும் காட்சிகளில் மோடி தலைமறைவாவதும், மோடி வரும் காட்சிகளில் அத்வானி தூங்கி போவதுமாக ரொம்ப மெதுவாக நகரும் கதை மொக்கை போடுகிறது. நாயகனின் நண்பர்களாக வரும் சுஷ்மா, கத்காரி போன்றோர் சிரிப்பை வரவைக்கின்றனர். மொத்தத்தில் 'அரசியலில் சொதப்புவது எப்படி?' - சொதப்பீட்டீங்களே இப்படி.

முதலிடத்தில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இருப்பது ஜால்ராகுமாரின் 'மக்குபாய்'. 29ரூபாய் உங்களுக்கு யார் பிச்சை போட்டார்கள் என நாயகன் கழுத்து நரம்பு புடைக்க கத்தும் போது, உங்களுக்கு 2ரூபா யாரு போட்டாங்களோ அவங்க தான் என ரசிகர்கள் கத்தும் அளவு லாஜிக் ஓட்டைகள் நிரம்பி இருக்கிறது. கதாநாயகன் கொடுத்த காசுக்கு மேல் கூவுவதும், ப்ளாஷ்பேக்கில் தற்பொழுது இருப்பதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் இருப்பதும் கதைக்கு ஒட்டவில்லை. ஆக மொத்தத்தில் 'மக்குபாய்' - மக்குபாயே தான்.!

3 comments:

  1. பதிவு செம காமெடி - MMS கண்டிப்பா மௌனகுரு தான் ஆனா ஞானதேசிகனுக்கு 7ம் அறிவா? :)- @sweetsudha1

    ReplyDelete
  2. நன்றாக இருந்தது.

    ReplyDelete
  3. ஹா ஹா அருமை,, குட் போஸ்ட் இன்னும் நிறைய கலக்கல் பதிவுகள் எதிர்பார்க்கிறேன்

    ReplyDelete