சென்ற வாரம் பல பொருளாதார மேதைகள் கவனிக்க தவறிய ஒரு செய்தி உண்டு. உலகில் மொத்தமே வாழும் 110000 பார்சிக்களுக்கான 'பாம்பே பார்சிகள் பஞ்சாயத்' எனும் அமைப்பு மாதம் ரூ.90000 'க்கு கீழ் சம்பாதிக்கும் பார்சிகள் ஏழை என அறிவித்து இருக்கிறது. அப்படி வாழும் ஏழை(?) பார்சி மக்களுக்கு வீடு ஒதுக்கி உதவியும் செய்யப்படும் என அறிவித்தும் இருக்கிறது. நமது இந்தியாவின் திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியாவோ தினம் ரூ.28.65/- க்கு மேல் சம்பாதிக்கும் நகர்புற இந்தியர்களும், ரூ.22.42/- மேல் சம்பாதிக்கும் கிராமப்புற இந்தியர்களும் வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் பணக்காரர்கள் என அறிவித்து இருக்கிறது. ஆக, வறுமை கோடு என்பது தொப்பையின் மடிப்பிலும் இருக்கலாம், பசியால் வயிறு சிறுத்தவனின் சுருக்கங்களிலும் இருக்கலாம். இப்போ தினம் ரூ.28.65/- க்கு மேல் சம்பாதிக்கும் பணக்காரர்களை எப்படி கண்டறிவது, அவர்களிடம் இருக்கும் 'அளவுக்கு' அதிகமான பணத்தை என்ன செய்வது என்று பார்க்கலாம்.
மாதா, பிதா, குரு, பெட்ரோல், டீசல், தங்கம் என்றாகிவிட்ட சூழ்நிலையில் 400 மில்லிக்கு மேல் பெட்ரோல் போடும் மர்ம நபர்களின் வீடுகளில் வருமானவரி துறையினரை விட்டு சோதனை செய்யலாம்.
துணி துவைக்கவும், தேய்த்து குளிக்கவும் இரு வேறு சோப்புகளை பயன்படுத்துபவர்களை தேச துரோக வழக்கில் பிடித்து சிறையில் அடைக்கலாம்.
ஹோட்டல்களில் 15 ரூபாய் மதிப்புள்ள ரெண்டு தோசை சாப்பிடும் உல்லாச மனிதர்களை வருமானத்திற்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கில் கைது செய்யலாம்.
வருடம் ஒரு குவாட்டருக்கு மேல் குடிக்கும் குடிமகன்களை, அவர்களின் கருப்பு பணம் எங்குள்ளதென டார்ச்சர் செய்யலாம்.
பொண்டாட்டிக்கு 50 கிராமுக்கு மேல் அல்வா வாங்கி போகும் கணவர்களை ஹவாலாவில் கைது செய்து திவாலாக்கலாம்.
செல்போனில் இருந்து தினம் பத்து மேற்பட்ட அழைப்புகளும், மெசேஜ்களும் அனுப்பும் பணக்காரர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்யலாம்.
ஒரு டீ 6 ரூபாய், ஒரு வடை 6 ரூபாய் - ஆக தினம் ஒன்றுக்கு மேற்பட்ட டீ வடை சாப்பிடும் நபர்களை ஸ்பாட்லியே பிடித்து luxury tax போடலாம்.
கோவில் வாசல், சிக்னல் பிச்சைக்காரர்களிடம் தினம் வரும் வருமானத்தை கணக்கீடு போடலாம், ரூ.28.65/- க்கு மேல் வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கலாம்.
தினம் ஒரு வேளைக்கு மேல் சாப்பிடும் ஆட்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்.
காதலிகளுக்கு கர்ச்சீப், கைக்குட்டை தவிர வேறு பரிசு தர முயற்சிப்பவர்களை கைது செய்து, வெளிநாட்டில் இருந்த பணம் வந்ததா என கண்டறியலாம்.
லிட்டர் 36/- ரூபாய்க்கு விற்கும் பாலை, தினம் இரண்டு இருமல் மருந்து பாட்டில் மூடிக்கு மேல் குடிப்பவர்களை நாடு கடத்தலாம்.
10/- ரூ. கொடுத்து சட்டை, பேன்ட் அயர்ன் பண்ணி போட்டு வருபவர்கள் அன்று முழுக்க வேறு ஏதாவது செலவு செய்கிறார்களா என சி.பி.ஐ விட்டு கண்காணிக்க செய்யலாம்.
வருடம் ஒரு பனியன் ஒரு ஜட்டிக்கு மேல் பயன்படுத்துபவர்களை கண்டறிந்து தேவையற்ற பனியன் ஜட்டிகளை பறிமுதல் செய்யலாம்.
இதை விட முக்கியமானது, அளவுக்கு அதிகமாக வாக்காளர்கள் கவனிக்கப்படும் இடைதேர்தல்களை தேர்தல் ஆணையமே புறக்கணித்து பண புழக்கத்தை தடுக்கலாம்.
No comments:
Post a Comment