ஒரு ஈ'யை வைத்து எடுக்கப்பட்ட 'நான் ஈ' திரைப்படம் வசூலை குவித்துக்கொண்டிருக்கிறது. நம்மாளுங்க மட்டும் என்ன கற்பனையும் திறமையும் குறைந்தவங்களா, ஹீரோவ ஒரு கிராபிக்ஸ் மிருகமா மாத்தி படம் எடுக்க மாட்டாங்க? இதோ நமது திறமைமிகு படைப்பாளிகள் யோசித்து வைத்திருக்கும் ஸ்க்ரிப்ட்களின் FIR ( சிரிக்க மட்டுமே )
இயக்குனர் 'சரி' :
ஒரு நேர்மையான போலீஸ் ஆபிசர் சினம் கொண்ட பூனையாக மாறி வில்லன்களை நோண்டி நொங்கு எடுக்கும் கதை. 'நான் போலீஸ் இல்ல, பூனை', 'ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட்டு, பூனையோட யானை கொஞ்சம் தான் ஹயிட்டு' என்று பல பல பன்ச் டயலாக்குகள் படத்தை அலங்கரிக்க போகின்றனவாம். உருட்டுக்கட்டை, அருவாள், டாட்டா சுமோ என்று வரும் வில்லன் பெருச்சாளிகளும், 'ஏய்ய்ய்ய்ய்ய்ய்யா ' என அலறும் அப்பத்தா பூனைகளும், 2000-3500 பூனைகள் ஒண்ணா வாழும் கூட்டு குடும்பங்களுமாக பக்கவான படம்.
செலவுராகவன் :
இந்த சமூகத்தால் ஒரு ஒரு சராசரி பையன் எப்படி மனபிறழ்வு கொண்டு தெருநாயாக ஆனது என்பதை பற்றிய கதை வைத்திருக்கிறார். பக்கத்து அப்பார்ட்மென்ட் பொமரேனியன் நாயோடு ஆரம்பித்த காதலின் தோல்வியும், வறுக்கி பிஸ்கட் கிடைக்காத ஏமாற்றமும் இந்த நாயகனின் வாழ்கையை எப்படி திசை மாற்றுகிறது என்பதை சொல்கிறார். வழக்கம் போல நாய்குட்டிகள் ஒன்று சேர்ந்து தீ மூட்டி சுற்றி டான்ஸ் ஆடுவதும், நாயகி நாய்க்குட்டி நாயகன் நாய்க்குட்டியை காலால் நெஞ்சில் உதைப்பதும் என செம ஸ்டோரி.
கே.எஸ்.கவிக்குமார்:
ஒரு ஊருல ஒரு குளம். அதில் குளமே மதிக்கும் ஆமையின் குடும்பத்தை பற்றிய கதைதான் அந்த ஹைடெக் NOTஆமை படம். வழக்கம் போல நண்டு பிராது கொடுப்பதும், மீனை குளத்தை விட்டு ஒதுக்கி வைப்பதுமென கிராபிக்ஸ் ஜாலங்கள் நிறைந்திருக்கும் கதை. ஆமை வெத்தலை போட்டு துப்பும் போது மட்டும் 3D'யில் வெற்றிலை சாறு நம்ம மேல விழுவது போல இருக்கும், வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு படம் பார்க்க போயிடாதீங்க.
ஷிங்கர் :
சமூக அவலங்களை கண்டு ஒரு மண்புழு பிரமாண்ட அனகொண்டா அவதாரம் எடுக்கும் வொண்டர்புல் ஸ்க்ரிப்ட். ஹீரோயின் பட்டுபுழுவை ஹீரோ மண்புழு சைட்டடிப்பது தனி டிராக். பாடல் காட்சிகளில் ஹீரோயின் பட்டுப்புழுவின் கலருக்கு ஏற்ப தாஜ்மகால் கலர் மாறுவது, சீன பெருஞ்சுவர் முழுவதும் மண்புழுவின் போஸ்டர் ஒட்டப்படுவது என பிரமாண்ட கிராபிக்ஸ்கள் ஏராளம். இந்தியாவில் அனைவருக்கும் மொட்டையடித்து ஒரு பாடல் எடுக்க திட்டமிருந்தது, ஆனால் அதை மத்திய மாநில அரசுகளே செய்வதால், திட்டம் கை விடப்பட்டதாம்.
மாலா :
'எவன் அவன்' படத்துக்கு பிறகு நீண்ட நாள் யோசித்து மாலா எடுக்கும் படம். காசியில், அழுக்கான கங்கை கரையில் வாழும் ஒரு கொசுவை அனிமேஷன் செய்து எடுக்கப்படும் படம். நிஜ கொசுவை வைத்தே எடுக்க நினைத்து இருந்தார், ஆனா எவ்வளவு முயற்சி செய்தும் கொசு இவர் சொல்வதை புரிந்து கொள்ளாததால், முதன் முறையாக அனிமேஷனுக்கு போயிருக்கிறார். கையகல திருவோட்டை கொண்டு கங்கை கரையில் கொசு பிச்சை எடுக்கும் காட்சி கல் நெஞ்சையும் உருக்கிவிடும் என்கிறார்கள். கிளைமாக்சில் கஞ்சா தோட்ட அதிபரை கொசு கடித்து கொல்லும் காட்சியில் தியேட்டரே அதிரும் என்கிறார்கள்.
Boreரரசு :
ஹீரோ வெட்டுக்கிளியின் பேரு மதுரை, ஊரு சேலம். ஹீரோயின் மூட்டபூச்சியின் பேரு வந்தவாசி, ஊரு நாமக்கல். வில்லன் கரப்பான்பூச்சியின் பேரு புதுகோட்டை, ஊரு சங்கரன்கோவில். சேலத்தில் இருக்கும் மதுரை நாமக்கல் வந்தவாசிய லவ் பண்ண, இது புடிக்காத புதுகோட்டை, சங்கரன்கோவில் விட்டு கிளம்பி நாமக்கல் வர, நாமக்கல் வந்தவாசி சேலம் போய்விட, அந்த நேரம் மதுரை அங்க வர, புதுகோட்டைக்கும் மதுரைக்கும் கோவையில கிளைமேக்ஸ் சண்டை. ' நான் வெட்டுக்கிளி, படம் பாக்குறவன் சட்டைய கிழி' என்ற ஓப்பன் சாங்கில் வெட்டுக்கிளியின் கிராபிக்ஸ் டேன்சுக்கு பல கோடி செலவு செய்து இருக்கிறார்களாம்.
'மினி'ரத்னம் :
உள்ளூரில் ஜோசியம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கிளி, கல்யாணமாகி, காஷ்மீருக்கு ஹனிமூன் போகும் போது கடத்தப்படும் அருமையான கதை. 'கீ கீ' என்ற வார்த்தைகள் மட்டுமே கிளி பேசும் என்பதால், டயலாக் எழுதுவது ரொம்ப ஈசியாகி விட்டதாம். எனக்கு ஒரு நாளைக்கு வர மொத்த எஸ்.எம்.எஸ் தான் அவரு மொத்த படத்துலேயும் டயாலாக்கா இருக்கும் என்பது வேறு விஷயம்.
No comments:
Post a Comment